உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி மீது அவதூறு செய்தி பரப்பியதற்காக, கோவை திமுக பொதுக்குழு உறுப்பினர் முருகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சமூகவலைதளங்களில் தவறான தகவல்களை கோவை திமுக பொதுக்குழு உறுப்பினரான முருகன் பரப்பி வந்ததாக புகார் எழுந்தது. இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முருகனை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். நீதிமன்றம் இன்று விடுமுறை என்பதால், நீதிபதியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, தி.மு.க.வினர் காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால், காவல் துறையினருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட நீதிபதி முன்னிலையில், முருகனை ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.