திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கிறது : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

ஆயிரத்து 620 கோடி ரூபாய் மதிப்பில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை பூமி பூஜை செய்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கோவையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், அதிமுக ஆட்சியில் அதிக பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக கூறிய அமைச்சர், கோவை அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் அதி நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்ததாக கூறிய அமைச்சர், பொய் பிரசாரம் செய்வதையே திமுக வாடிக்கையாக கொண்டுள்ளதாக சாடினார்.

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் எதிர்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்து, மக்கள் விரும்பும் தலைவராக மாறியுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். அப்போது, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Exit mobile version