திமுக தலைவர் ஸ்டாலின் தங்கை கனிமொழியின் சொத்து விபரம்

திமுக சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும், திமுக தலைவர் ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளார். அதன்படி 30 கோடி ரூபாய் சொத்துக்கள் தனக்கு உள்ளதாக கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட்ட போது தாக்கல் செய்த சொத்து விவரத்தில் அசையும், அசையா சொத்துக்கள் என 26 கோடி ரூபாய் உள்ளதாக தெரிவித்திருந்தார். தற்போது அது 30 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கனிமொழி குறிப்பிட்டுள்ளார். கனிமொழி பெயரில் 21 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 369 ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணம், வங்கி கையிருப்பு, தங்க, வைர நகைகள், கார்கள் போன்ற அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும், வீடுகள், கட்டிடங்கள் என கனிமொழி பெயரில் மொத்தம் 8 கோடியே 92 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கணவர் அரவிந்தன் பெயரில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 223 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாக கூறியுள்ளார். மொத்தமாக கனிமொழி பெயரில், 30 கோடியே 8 லட்சத்து 72 ஆயிரத்து 362 ரூபாய் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும், கணவர் பெயரில் 13 லட்சத்து 83 ஆயிரத்து 223 ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் உள்ளதாக கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி பெயரில் 1 கோடியே 92 லட்சத்து 90 ஆயிரத்து 928 ரூபாய் கடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கனிமொழியின் இதர பங்குகளாக வெஸ்ட்கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் 50 ஆயிரம் பங்குகளையும், கலைஞர் தொலைக்காட்சியில் 20 லட்சம் பங்குகளையும் கனிமொழி வைத்துள்ளார். 84 லட்சத்து 11 ஆயிரத்து 605 ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார் ஒன்றும் 16 லட்சத்து 32 ஆயிரத்து 637 ரூபாய் மதிப்பிலான டொயோடா கோரெல்லோ அல்டிஸ் உள்ளிட்ட விலை உயர்ந்த சொகுசு கார்களையும் வைத்துள்ளார்.

கனிமொழியிடம் 26 லட்சத்து 85 ஆயிரத்து 260 ரூபாய் மதிப்புள்ள 100 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளன. கனிமொழியின் கணவர் அரவிந்த் மற்றும் ஆதித்யா ஆகியோர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் என்பதும் வெளிநாடுகளில் பல நிறுவனங்களை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 ஆண்டுகளில் கனிமொழியின் சொத்து 4 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதுதவிர கனிமொழி மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version