நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் உள்ளாட்சி தேர்தலில் துணைத்தலைவர் பதவி ஆசையில், அதிமுக வார்டு உறுப்பினரின் கணவன் மற்றும் நண்பர்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த திமுக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திமுக முன்னாள் இருக்கூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆறுமுகம், இந்தாண்டு தனது மனைவியை எப்படியாவது ஊராட்சி மன்ற துணைத் தலைவராக்க வேண்டுமென திட்டம் தீட்டியுள்ளார். இந்த நிலையில் அதிமுக சார்பில் செந்தில்குமாரின் மனைவி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டதால், செந்தில் குமாருக்கு ஆறுமுகம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சூழ்ச்சியாக செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர் தியாகராஜன் இருவரையும் ஆறுமுகம் கடந்த 30-ஆம் தேதி தனியாக மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் மது அருந்திய இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போகவே , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, அவரது நண்பர் தியாகராஜன் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், இருவருக்கும் மதுவில் விஷம் கலந்து கொடுத்தது ஆறுமுகம் தான் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஆறுமுகம் மற்றும் அவரது கூட்டாளி இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.