ஊழலுக்கு ஊற்றுக்கணாக விளங்கும் தி.மு.க., ஊழலைப் பற்றி பேசுவதா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் குறித்த புள்ளி விவரங்களை பட்டியலிட்டார். முந்தைய தி.மு.க. ஆட்சியில் அவசர கோலத்தில் பாலத்திற்கான டெண்டர் விடப்பட்டு, அப்படியே விட்டுச் செல்லப்பட்டதாகவும் கூறினார். அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் அந்த பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக முதலமைச்சர் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்தார்.
சொத்து விவரங்களை வெளியிட துரைமுருகன் தயாரா என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊழல் ஊழல் என ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்வது திமுகதான் என்று காட்டமாக விமர்சனம் செய்தார்.
திமுகவில் உதயநிதியைத் தவிர பெரிய தலைவர்கள் இல்லையா? என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. ஒரு கட்சியல்ல…. அது ஒரு கார்பரேட் கம்பெனி என விமர்சனம் செய்தார்.
தமிழகத்தில் கூட்டணி மந்திரிசபையை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றும் இதுவே அதிமுகவின் நிலைப்பாடு என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் ஓய்வுபெறும் வயதில் கட்சி தொடங்கியிருப்பதாகவும், அவர் அரசியலில் ஒரு ஜீரோ என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.