"பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள்" விரிவான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

பொங்கல் தொகுப்பு வழங்கியதில் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமாறு முதலமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகைக்கு ரொக்கத்துடன் கூடிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், துணிப்பையுடன் கூடிய சமையல் பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் மக்கள் உற்சாகமிழந்து காணப்படுவதாக கூறியுள்ளார்.

இந்தப் பொருட்கள் வழங்குவதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்ததை ஏற்கனவே தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியதை குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் தொகுப்புத் திட்டத்தைப் பற்றி சிலர் தவறான, விஷமத்தனமான கருத்துகளை பரப்பி வருவதாக முதலமைச்சர் கூறிய நிலையில், அவ்வாறான தவறான கருத்துகளை யாரும் பரப்பியதாகத் தெரியவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தரமற்ற பொருட்கள், எடை குறைவு, பொருட்களின் எண்ணிக்கை குறைவு, துணிப்பை வழங்காமை என பல்வேறு உண்மை நிகழ்வுகளைத்தான் மக்கள் எடுத்துக் கூறியிருப்பதாகவும் அறிக்கையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெளிவுபடுத்தியுள்ளார்.

துணிப்பை பற்றாக்குறை என்பதை அரசே ஒப்புக் கொண்டது, “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதுபோல மக்களின் மற்ற குறைகளை தட்டிக்கழிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

அரசு எந்தப் பொருள்களை கொள்முதல் செய்து விநியோகம் செய்கிறதோ, அதைத்தான் நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் வழங்குகிறார்கள் என்றும், எனவே, அவர்களை குறைசொல்வதில் எவ்விதப் பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். பொங்கல் தொகுப்புத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்பதுதான் யதார்த்தம் என்றும் விமர்சித்துள்ளார்.

இதைவிட ரொக்கமாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என மக்களே கூற ஆரம்பித்துவிட்டார்கள் என்றும், மொத்தத்தில், இந்தத் திட்டம் படுதோல்வி அடைந்து இருக்கிறது என்பதுதான் உண்மை என்றும் கூறியுள்ளார். மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் வேட்டி சேலை எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்ற புகாரும் ஆங்காங்கே எழுந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களின் புகார்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சருக்கு உண்டு என்பதால், அவர், இதில் உடனடியாகத் தலையிட்டு, பொங்கல் தொகுப்பு திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும், குளறுபடிகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version