திமுக அரசு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும்-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற நிலை இருக்கும் நிலையில், மக்களின் நிலையை நினைத்து பார்க்க அச்சமாக இருப்பதாக அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிக்கை வெளியிட்டுள்ள அவர், வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் நிலைய சார் ஆய்வாளர் சீனிவாசனை, பணி செய்யவிடாமல் திமுக பிரமுகர்கள் மிரட்டுவதாகவும், தொல்லைக் கொடுப்பதாகவும் மன உளைச்சலில் அவர் பேசிய ஆடியோவை கேட்கையில், ஒரு காவல் சார் ஆய்வாளரே இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்றால், மற்றவர்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

குற்றம் செய்வதைத் தடுக்க வேண்டிய காவல்துறையினரையே குற்றம் செய்யத் தி.மு.க. தூண்டுகிறது என்றும்,கடந்த எட்டு மாத காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, தீயசக்திகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வது தெள்ளத் தெளிவாகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரின் துறையிலே இதுபோன்ற அராஜகம் என்றால் மற்ற துறைகளில் கேட்கவே வேண்டாம் என்று விமர்சித்துள்ள அவர்,தி.மு.க.வினரின் இதுபோன்ற அராஜகச் செயலுக்கு, சட்ட விரோதச் செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வினர் அரசு அதிகாரிகளையும் , காவல்துறையினரையும் மிரட்டுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், மக்கள் தங்கள் பணிகளை அச்சமின்றி மேற்கொள்ளவும், காவல் சார் ஆய்வாளர் சீனிவாசனை மிரட்டிய தி.மு.க.வினரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனைப் பெற்றுத் தரவும் முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version