"கொரோனா நிவாரண நிதியை உடனே வழங்குக"-எதிர்க்கட்சித் தலைவர்

உச்சநீதிமன்ற ஆணைப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் இறந்தவர் குடும்பங்களுக்கு நிவாரணமாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, கொரோனாவால் இறந்தவருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கவேண்டும் என குரல் கொடுத்த நிலையில், ஆட்சிக்கு வந்து 8 மாதங்களாகியும் இதுவரை நிவாரணம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றது முதல் ஆடம்பர மற்றும் தேவையில்லாத செலவுகளை செய்கிறாரே தவிர, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கோரிய ஒரு கோடி ரூபாய் வழங்குவதை யார் தடுக்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

குறைந்தபட்சமான 50 ஆயிரம் ரூபாயை கூட வழங்க இயலவில்லை என்றால், அரசின் திறமையின்மையை ஸ்டாலின் ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தாமதம் செய்தால் இறந்தவர்களின் குடும்பத்தினர் வீதியில் இறங்கி போராடும் சூழ்நிலை ஏற்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version