மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அடுத்த 25 நாட்களுக்கு மட்டுமே குறுவை சாகுபடிக்கு நீர் கிடைக்கும் என்பதால் டெல்டா விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி பாசனத்துக்காக கடந்த மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆரம்பத்தில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் அணையின் நீர் மட்டமும் கிடுகிடுவென குறைந்து வந்தது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்திருக்கும்.
ஆனால், திமுக அரசு மெத்தனப் போக்குடன் செயல்பட்டதால், தற்போது அணையின் நீர் இருப்பு குறைந்து அடுத்த 25 நாட்களுக்கு மட்டுமே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று(12.07.2021) காலை நிலைவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.81 அடியாகவும், நீர் இருப்பு 36.97 டி.எம்.சி யாகவும் உள்ளது.
மேட்டூர் அணை திறக்கப்பட்டத்தில் இருந்து ஒரு மாதத்தில் நீர் மட்டம் 23.26 அடியும், நீர் இருப்பு 24.96 டி.எம்.டியும் குறைந்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடாகாவில் இருந்து தண்ணீர் பெற முடியாமல் தற்போது, நீர் திறப்பை 8 ஆயிரம் கனஅடியாக குறைத்து இருக்கிறது தமிழக அரசு.
அப்படியும் இன்னும் 25 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்பதால் லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடி செய்துள்ள டெல்டா விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.