புதுக்கோட்டையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை திமுக அரசு கிடப்பில் போட்டதால், அவை பழுதடைந்து வீணடிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, விலையில்லா அம்மா கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன. அவை அந்தந்த மாவட்டத்தின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் சேமிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், தற்போது திமுக ஆட்சியில் இதன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், புதுக்கோட்டையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் பயன்படுத்தப்படாமல் பழுதடைந்த நிலையில் உள்ளன.
இந்த நிலையில், அம்மா கிரைண்டர் மற்றும் ஃபேன்களை இவ்வாறு கிடப்பில் போட்டு வீணடிப்பது நியாமா? என அரசுக்கு கேள்வியை முன்வைத்துள்ள சமூக ஆர்வலர்கள், உடனடியாக பொதுமக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதுபோல் பல மாவட்டங்களில் தேங்கியுள்ள நிவாரண பொருட்களையும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.