அம்மா உணவகங்களில் பணியாற்றுபவர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என்று திமுக அரசுக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒரு பக்கம் அம்மா உணவகங்களை இருட்டடிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வரும் திமுகவினர்,மறுபக்கம் அம்மா உணவகங்களில் பணிபுரிவோரை வேலையிலிருந்து நீக்கும் முயற்சியையும் செய்துவருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களை திமுகவினர் பணி நீக்கம் செய்துள்ளதாகவும், இதனை கண்டித்து அறநெறியில் போராடியவர்களை காவல்துறை மூலம் கைது செய்வோம் என மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டி வருவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
அம்மா உணவகங்களில், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் தான் பணியாற்றுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர், அம்மா உணவக ஊழியர்களின் வாழ்வாதராத்தை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று வலியுறுத்தியுள்ளார்.
ஏழை, எளிய தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட அரசு வழிவகை செய்திட வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.