எதிர்க்கட்சியாக இருந்தபோது தாங்கள் மட்டுமே மக்கள் நலனில் அக்கறை காட்டுவதாக நாடகமாடிய திமுகவின் உண்மை முகம், ஆட்சிக்கு வந்து அறிவிக்கப்படும் இழப்பீடுகள் மூலம் தற்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் மழையால் லட்சக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விவசாயிகளின் துயர் துடைப்பதாக பெயரளவில் ஆய்வு நடத்திய திமுக அரசு, தற்போது ஹெக்டேருக்கு 20ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஹெக்டேருக்கு 30ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றெல்லாம் போராட்டம் நடத்திய திமுக, தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் அதனைச் செயல்படுத்தாமல் கைவிரித்தது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்புகளை சரி செய்ய திமுக அரசு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இதற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த தொகையையும் குறைத்திருப்பது திமுக அரசின் ஏனோதானோ நடவடிக்கை என்றே சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.