தமிழ்நாடு அரசின் செய்தி இந்தியில் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், திமுக அரசு மும்மொழிக்கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டுகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக மூன்று இடங்கள் உள்பட ஏழு இடங்களில் அகழாய்வு பணிகள் நேற்று தொடங்கின. இதுதொடர்பான விவரங்களை அகழாய்வு நடைபெறும் இடத்தின் படங்களுடன் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சமூக வலைதங்களில் வெளியிட்டது.
தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மும்மொழிகளில் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்படும், மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியில் செய்தி வெளியிட்டிருப்பதன் மூலம் திமுக அரசு இந்தியை ஏற்றுக்கொண்டதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.