உயர்மின் கோபுரங்கள் அமைக்க அப்போது எதிர்ப்பு… இப்போது ஆதரவு-திமுக அரசு

எதிர்க்கட்சியாக இருந்தபோது விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்ட பணிகளை மீண்டும் தொடங்கியிருப்பது விவசாயிகள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் ரெய்காரில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் வரை 800 கிலோ மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்கள் வழியாக 345 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. மின்கோபுரங்கள் அமைக்கப்படும் இடங்களில் நிலத்தின் உரிமையாளருக்கு நிலத்தின் தொகையில் 85 சதவீதம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், மின் கம்பிகளை பூமிக்கு அடியில் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2019-ல் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின், தற்போது ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்ட பணிகளை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முறையிட்டால், விவசாயிகளுக்கு தான் எந்த வாக்குறுதி கொடுக்கவில்லை என்றும் வாக்குறுதி கொடுத்த முதலமைச்சரிடம் சென்று கேளுங்கள் என அலட்சியம் செய்வதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version