நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், நீட் தேர்வு ரத்து வாக்குறுதியை நிறைவேற்றும் லட்சணம் இதுதானா? என, திமுக அரசை மக்கள் கேள்வி கேட்பதாக, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நீட் தேர்வு ரத்து குறித்த சட்டமுன்வடிவை நிறைவேற்றிவிட்டு, அதுபற்றி வாய் திறக்காமல் திமுக மவுனமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆளுநரை பல முறை சந்தித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நீட் சட்ட மசோதா தொடர்பாக பேசினாரா? அப்படி பேசப்பட்டிருந்தால், என்ன வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன என்பதை, மக்களுக்கு தெரிவிக்க, கடமையும், பொறுப்பும் அரசுக்கும், முதலமைச்சருக்கும் உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுகவின் சுயநலத்தால், ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வினை ரத்து செய்ய தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்றும், அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.