கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகக் கூறிச் சாலையை மறித்து திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பள்ளி கல்லூரி மாணவர்களும் பணிக்குச் செல்வோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் அனைத்துச் சாலைகளும் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் நிறைந்ததாகவே இருக்கும். வேலைக்குச் செல்வோர், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வோர் ஒரே நேரத்தில் புறப்பட்டுச் செல்வதால் காலை 8 மணி முதல் 10 மணி வரையில் ஓசூரின் வட்டாட்சியர் அலுவலகச் சாலை போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.
இந்நிலையில், இன்று தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், திமுகவினர் அண்ணாசிலை முன்பு பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரை அந்தப் பகுதியில் சாலையை மறித்து திமுகவினர் நின்றதால் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலை, இரயில் நிலையச் சாலை, பேருந்து நிலையச் சாலை, உழவர் சந்தைச் சாலை என நான்கு சாலைகளும் வாகனங்கள் நிறைந்து ஒருமணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் பள்ளி கல்லூரி மாணவர்களும், அலுவலகம் செல்வோரும் தாமதமாகச் செல்ல நேர்ந்தது. திமுகவினரால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து நெரிசலால் அவதியடைந்த வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் முணுமுணுப்புடன் முகம்சுழித்துக்கொண்டே அந்த இடத்தைக் கடந்து சென்றனர். பின்னர் காவலர்கள் தலையிட்டுப் போக்குவரத்தைச்
சீர்ப்படுத்தினர்.