ஆண்டிபட்டி திமுக ஒன்றிய வேட்பாளர் தன்னுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால், ஆத்திரமடைந்த திமுக எம்.எல்.ஏ மகாராஜன் வேட்பாளரின் சட்டையைப் பிடித்து இழுத்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 3 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் திமுக வேட்பாளர் ராஜேந்திரன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதனால் ஆத்திரமடைந்த ஆண்டிபட்டி திமுக எம்.எல்.ஏ.மகாராஜன் வேட்பாளர் ராஜேந்திரனை ஆபாசமாக திட்டி, சட்டையைப் பிடித்து இழுத்து தனது காரில் ஏற்ற முயன்றார். போலீசார் சமாதானப்படுத்தி ராஜேந்திரனை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதனால் ஆண்டிபட்டியில் பரபரப்பு. தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் மட்டும் 101 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில் மூன்றாவது வார்டுக்கு 6 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் ராஜேந்திரன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
திமுக வேட்பாளர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்ற தகவலறிந்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ராஜேந்திரனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதுடன் சட்டையை பிடித்து இழுத்து தனது காரில்
ஏற்ற முயன்றார். உடனடியாக அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் எம்எல்ஏ மற்றும் ராஜேந்திரனை விலக்கி சமரச முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ராஜேந்திரன் தான் யாருடனும் செல்ல விருப்பம் இல்லை என்று தெரிவித்ததை அடுத்து எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களை அப்புறப்படுத்திய பின் ராஜேந்திரன் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார் இந்த சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.