கட்சியினருக்கு தான் முதலில் நிவாரணம், ரேஷன் கடைகளில் திமுக அராஜகம்

தமிழ்நாடு முழுவதும் கொரோனா நிவாரண நிதியாக நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

பல இடங்களில் திமுக-வினர் வரிசையில் நிற்காமல் தங்களுக்கு முதலில் பணத்தை வழங்க கோரி அராஜகத்தில் ஈடுபட்டது பொதுமக்கள் முகம் சுளிக்க வைத்தது.

 

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், பதவியேற்றதும் 2 ஆயிரம் ரூபாய் மட்டும் முதலில் வழங்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டோக்கன் விநியோகம் தொடங்கியபோதே, திமுக-வினருக்கு மட்டும் முன்னுரிமை அளித்து டோக்கன் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.

சென்னை உள்ளிட்ட அனைத்த இடங்களிலும் பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று 2 ஆயிரம் ரூபாயை வாங்கிச் சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அடுத்த பெருமாள் பட்டு ஊராட்சியில், உள்ள நியாய விலை கடையில் திமுகவினருக்கு மட்டும் முன்னுரிமை அளித்து பணம் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.

இது குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் மீது, திமுக பிரமுகர் பரமேஸ்வரன் மற்றும் அவருடன் இருந்த திமுக குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலுல் திமுக வினருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டு டோக்கன் மற்றும் பணம் வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நியாய விலை கடைகளில் திமுகவினர் விளம்பரத்திற்காக ஒன்று கூடி, பணியாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று பொதுமக்களுக்கு வழங்கி வருவதால் நியாய விலை கடை பணியாளர்கள் தங்களது பணியை முறையாக செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

கோவையில் கொட்டும் மழையில் நனைந்தபடி பொதுமக்கள் நிவாரண தொகையை வாங்கிச் சென்றனர்.

ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியில் நியாய விலை கடைகளில் கூடிய பொதுமக்கள், 2 மணி நேரத்திற்கு மேலாக மழையில் காத்திருந்து நிவாரண தொகையை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

தஞ்சாவூரில் கொரோனா நிவாரண நிதியை ரேசன் கடையில் வழங்குவதற்கு பதிலாக, சுய விளம்பரத்திற்காக மேடை அமைத்து திமுகவினர் வழங்க முற்பட்ட செயல் அப்பகுதி மக்களை முகம் சுளிக்க வைத்தது.

மேலும் நிவாரண நிதி பெறுவதற்காக காலை முதலே பொதுமக்கள் வரிசையில் நின்ற நிலையில், திமுகவினர் யாரும் குறித்த நேரத்திற்கு வராததால், 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதிகளில் 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி பெறுவதற்கு மக்கள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அலை மோதியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிவாரண நிதி வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version