அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து உலகத்தின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிக் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற 4-வது ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் பப்லோ கரெனோ புஸ்டாவை ((pablo carreno busta)) எதிர்க் கொண்ட நோவக் ஜோகோவிக், தொடக்க செட்டை கைப்பற்ற தவறினார். இதனால் ஏற்பட்ட விரக்தியில், பந்தை லைன் நடுவர் மீது தவறுதலாக அடித்துள்ளார். இதனால் காயமடைந்த நடுவரிடம் ஜோகோவிக் மன்னிப்பு கோரினார். இருந்தபோதிலும் போட்டியின் விதிமுறைகளின் படி ஜோகோவிக் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ள ஜோகோவிச், இந்த ஒட்டுமொத்த சூழ்நிலையும் தம்மை வருத்தமடைய செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். காயம்பட்ட நடுவரை உடனடியாக சென்று கவனித்ததாகவும், கடவுள் புண்ணியத்தில் அவருக்கு எதுவும் ஆகவில்லை எனவும் ஜோகோவிச் தெரிவித்துள்ளார். தம்முடைய செயலால் நடுவர் அடைந்த மன வேதனைக்கு மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ள ஜோகோவிச், இந்த செயலை வேண்டுமென்றே தாம் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.