களைகட்டும் தீபாவளி விற்பனை: உச்சக்கட்ட பாதுகாப்பில் தியாகராயநகர்

தீபாவளி பண்டிகையானது வருகிற 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே சென்னை வாழ் மக்களுக்கு தியாகராய நகர் பகுதி தான் ஞாபகத்திற்கு வரும். தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வார காலத்திற்கு முன்பாகவே அந்த பகுதியில் உள்ள முக்கிய கடை வீதிகள் அனைத்தும் களைகட்டத் தொடங்கிவிடும். கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காக, மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனின் ஆணைக்கிணங்க, ஏற்கனவே தி.நகர் பகுதியில், 11 ஆயிரத்து 464 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அதிநவீன, 3 ஃபேஸ் டிடெக்-ஷன் கேமராக்களையும் பொருத்தியுள்ளனர்.

இந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் 2 டிரோன்கள் பயன்படுத்தப்படுவதுடன், உயர் கோபுரங்களில் 3 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலமாக அந்தப் பகுதி முழுவதையும் தீவிரமாக கண்காணிக்க முடியும் என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்.தியாகராய நகர் பகுதி முழுவதும் பொது மக்கள் நடமாட்டத்தை பயன்படுத்தி, பெண்களிடம் ராகிங் செய்பவர்களை கண்காணிக்க 15 பேர் கொண்ட குழுவினர், மாற்று உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.தீபாவளி பண்டிகையை ஒட்டி பாதுகாப்புக்காக, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 500 காவல்துறையினர் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் பாதுகாப்பாக வந்து செல்லவும், தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும், காவல்துறை எடுக்கும் சீரிய முயற்சிகளை, அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version