பிரதமர் மோடியை பறவையின் எச்சத்திற்கு ஒப்பிட்டு ட்வீட் செய்த நடிகை திவ்யா ஸ்பந்தனாவிற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் உலகின் மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். பின்னர் சிலையை அவர் சுற்றிப்பார்த்தார். அப்போது அவர் சிலைக்கு கீழே நிற்கும் புகைப்படங்கள் பரவலாக பகிரப்பட்டது.
இந்த நிலையில் சிலைக்கு கீழ் பிரதமர் மோடி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திவ்யா, “அதென்ன பறவை எச்சமா?” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
கர்நாடக மாநிலம் மண்டியா பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான திவ்யாவின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. திவ்யாவின் ட்வீட் ஆனது 3,800 லைக்குகளையும் 1,200 மறு ட்வீட்களையும் பெற்றது.
இதனையடுத்து பா.ஜ.க. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பா.ஜ.க.வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், திவ்யா ஸ்பந்தனாவை விமர்சித்து, இது சர்தார் படேல் மீதான வரலாற்று ரீதியான இழிவு, மற்றும் மோடி மீதான நோய்க்கூறான வெறுப்பு என்று கூறப்பட்டுள்ளது.