திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது திருப்பத்தூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுக தலைமைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக இருந்தவர் வேப்பல்நத்தம் பகுதியை சேர்ந்த காசி. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஒன்றிய பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, சதீஷ் என்பவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காசியை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, தங்களுக்கு அறிமுகமில்லாத புதிய நபரை பொறுப்பாளராக நியமித்த திமுக தலைமையின் நடவடிக்கையை திருப்பத்தூர் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கண்டித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர்கள் ஒன்று கூடி கூட்டம் நடத்தினர். அப்போது பேசிய காசி, தனது பதவி பிடுங்கப்பட்டு விட்டதாக கூறி அழுதார். அவரை சமாதானப்படுத்திய சக நிர்வாகிகள், வேலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தேவராஜை வன்மையாக கண்டித்தனர்.