சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனைமரத்துப்பட்டி ஏரியில் மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு மேற்கொண்டார்.
பருவ மழைக்கு முன்னரே சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரப்பட்டு தண்ணீர் சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் காவிரி உபரிநீரை கொண்டு 565 கோடி ரூபாய் செலவில் 100 ஏரிகள் நிரப்பப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளை மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு மேற்கொண்டார். இதில் 2 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பு கொண்ட சேலம் பனைமரத்துப்பட்டி ஏரியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் மாநகராட்சி ஆணையர் சதீஷ், முதல்கட்டமாக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் அரசின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் பனைமரத்துப்பட்டி ஏரி மீண்டும் நீர்நிலையாக மாற்றப்படும் என தெரிவித்தனர்.