தூத்துக்குடியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

தூத்துக்குடியில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளில் 3 ஆயிரத்து 537 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளில் 3 ஆயிரத்து 537 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரி, தூத்துக்குடியில் ஊரக பகுதிகளுக்கான டிசம்பர் 27ந் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்தலில், ஆயிரத்து 542 பதவிகளுக்கு 640 வாக்குபதிவு மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

டிசம்பர் 30ந் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில், ஆயிரத்து 995 பதவிகளுக்கு, ஆயிரத்து 178 வாக்குபதிவு மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது என்று தெரிவித்தார். இரண்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் மொத்தம் 8 லட்சத்து 2 ஆயிரத்து 157 பேர் வாக்களிக்க உள்ளதாகவும் மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக, தேர்தல் அலுவலர் மற்றும் உதவி அலுவலர்களுக்கான பயிற்சியை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊரக பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பணியில் 14 ஆயிரத்து 880 அலுவலர்கள் ஈடுபட இருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version