பிரிக்க முடியாதது எதுவோ என்றால் அது திமுகவும், ஊழலும் தான். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என்ற வரலாற்றுப் பெருமைக்கு துளியளவும் பங்கம் வந்துவிடாமல் இதோ ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் மீண்டும் தங்கள் உண்மை முகங்களை வெளிக்காட்டத் தொடங்கி விட்டனர்.
திமுக அமைச்சரவை உருவான நாள் முதலே, தங்களின் துறைசார்ந்த ஒப்பந்தங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக அரசல் புரசலாக பேசப்பட்டது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள், அமைச்சர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் ஊரை அடித்து உலையில் போட்டு தங்கள் கல்லாவை நிரப்பி வரும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தாங்களே கொண்டு வந்ததாக திமுக அரசு தம்பட்டம் அடிக்கிறது என்றால், மக்கள் பயன்பாட்டுக்காக அதிமுக ஆட்சியில் இலவசமாக வழங்கப்பட்ட சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கி சொந்தக் கஜானாவை நிரப்பி வருகிறார்கள் திமுக எம்.எல்.ஏக்கள்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் இலவசமாக பயன்படுத்தி வந்த சேவைகளை, திமுக எம்.எல்.ஏக்கள் தற்போது கட்டண சேவையாக மாற்றியுள்ளனர்.
சென்னையில் பொது மக்கள் பயன்பாட்டுக்காக, பொது இடங்களில் கட்டணமில்லா கழிப்பிடங்களை அதிமுக ஆட்சி ஏற்படுத்தி தந்தது. ஆனால் தற்போது மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அந்தக் கழிப்பிடங்களை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைப்பற்றி அதை சில லட்சங்களுக்கு குத்தகைக்கு விட்டுள்ளதாகவும், குத்தகை எடுத்தவர்கள் தற்போது சிறுநீர் கழிப்பதற்கும் மலம் கழிப்பதற்கும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாகவும் மக்கள் குமுறுகின்றனர்.
இதே போல சமூக நலக்கூடத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதானாலும், நடைபாதையில் கடை விரிப்பதானாலும், புதிதாக கட்டடங்கள் கட்டினாலும், அந்தந்த தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கட்டிங் கொடுக்காமல் எதுவும் நடப்பதில்லை.
இதற்காகவே கண்கொத்தி பாம்பாக சுற்றிவரும் எம்.எல்.ஏக்களின் உதவியாளர்கள் பலரும் அடாவடியாக மக்களிடம் பணம் பிடுங்கி வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இப்படியெல்லாம் சம்பாதித்து, தங்கள் சொத்து மதிப்பையும் அதிகரித்து வருவதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதற்கு மயிலாப்பூர் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் வேலுவை உதாரணமாக கைகாட்டுகின்றனர்.
தேர்தலின் போது, தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் 2019-20 ஆம் ஆண்டில் தன்னுடைய ஆண்டு வருமானம் 4லட்சத்து 94ஆயிரம் தான் என்று குறிப்பிட்டுள்ள வேலு, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 7 மாதத்தில் ஆழ்வார்பேட்டையில் இரண்டரை கோடிக்கு தன் மனைவியின் பெயரில் சொத்து வாங்கியிருப்பதே இதற்கு சான்றாக அமைந்துள்ளது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல திமுக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் நலனில் அக்கறை கொண்டு குறுகிய காலத்தில் சொத்துக்கள் சேர்த்து வருவதை பார்க்கும் போது, திமுகவின் ஊழல் வரலாறு திரும்புவதாக மக்கள் அதிர்ச்சியை தெரிவிக்கின்றனர்.