சீரடி சாய்பாபா கோயில் மூடப்படுவதாக பரவும் தகவல் தவறானது என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சாய்பாபா கோவிலுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சென்றிருந்தார். அப்போது அவர் பேசுகையில், சாய்பாபா பிறந்தது பர்பானி நகரில் உள்ள பத்ரி என்றும் ஷீரடி அல்ல எனவும் கூறினார். மேலும், பத்ரி நகர வளர்ச்சிக்காக 100 கோடி ருபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். உத்தவ் தாக்கரேயின் இந்த அறிவிப்பு ஷீரடி பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஷீரடியில் இன்று பந்த் நடைபெறும் என அப்பகுதியினர் அறிவித்தனர். இதற்கிடையே, ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி இன்று முதல் மூடப்படுவதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, சீரடி சாய்பாபா பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சீரடி சாய்பாபா கோயில் மூடப்படுவதாக பரவும் தகவல் வதந்தி என்றும், வழக்கம் போல் கோயில் செயல்படும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயிலில் அனைத்து மத சடங்குகளும் தொடர்ந்து நடைபெறும் கூறப்பட்டுள்ளது.