காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இதுவரை 25 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
காணும் பொங்கலையொட்டி சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான மெரினா, பெசன்ட் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். மக்கள் அதிகளவில் குவிந்ததால் மெரினா கடற்கரையில் குப்பைகள் குவிந்துள்ளன. மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மெரினா கடற்கரையில் 15 புள்ளி 8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டதாகவும், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 10 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் குப்பைகளை அள்ளும் பணியில் 120 துப்புரவு பணியாளர்கள், ஒரு காம்பேக்டர் வாகனம், கடற்கரை மணலை சுத்தம் செய்யும் 6 இயந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 50 துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.