போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

சென்னை போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை எதிர்த்து போயஸ் கார்டன் கஸ்தூரி எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊரடங்கு நேரத்தில் கையகப்படுத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்,

இதில் எந்த அவசரமும் காட்டப்படவில்லை எனவும் விளக்கம் அளித்தார். மேலும், தமிழகத்தில் மக்களின் அன்பைப் பெற்ற பல தலைவர்களுக்கு நினைவு இல்லங்கள் உள்ளதாகவும், இது முதல் நினைவு இல்லம் அல்ல எனவும் அவர் வாதிட்டார். இல்லத்தில் உள்ள அசையா சொத்துக்களை கையகப்படுத்தவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக கூறிய அரசு வழக்கறிஞர், அச்சத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தற்போதைய நிலையில் கையகப்படுத்தும் நடவடிக்கையில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version