வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு புறப்பட்டது. மொத்தம் 180 பயணிகள் மற்றும் ஊழியர்கள் 6 பேருடன் புறப்பட்ட விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் நேற்று இரவு தரையிறங்கிய போது, ஓடுபாதையில் இருந்து சறுக்கிச் சென்று, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. தரையில் மோதிய வேகத்தில் விமானம் இரண்டாக உடைந்ததால், இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், விமானத்தின் கறுப்பு பெட்டியை மீட்பு படை வீரர்கள் கண்டெடுத்துள்ளனர். விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன், விமானிகளின் உரையாடல் கறுப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் என்பதால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்த விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மீட்கப்பட்டுள்ள கறுப்பு பெட்டி டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விமான விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 149 பயணிகள், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 22 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலுதவி அளிக்கப்பட்டு 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.