கடற்கரையை ஒட்டிய பகுதியில் நீருக்கடியில், புதிதாக ஆறு இருப்பது கண்டுபிடிப்பு!

ஆஸ்திரேலிய கடற்கரையை ஒட்டிய பகுதியில் நீருக்கடியில், புதிதாக ஆறுகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குளிர்காலத்தில் ஓடும் இவ்வகை ஆறுகள் கண்டுபிடிக்கப்பட்டது எவ்வாறு என்பதை தற்போது காணலாம். கடல்கள் குறித்தும், நிலத்தடி நீர் குறித்தும் பல்வேறு நாடுகள் ஆய்வு நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளும் இது தொடர்பாக ஆய்வு நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய ஆய்வில் கடல் நீருக்கடியில் நதிகள் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு முடிவுகள் Nature Scientific Reports என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக்காக IMOS எனப்படும் தேசிய ஒருங்கிணைந்த கடல் கண்காணிப்பு அமைப்பின் ரோபோட்டிக் கிளைடர்கள் பயன்படுத்தப்பட்டன. நீருக்கடியில் தானாக இயங்கும் இந்த கிளைடர்கள் கடல் நீர் மற்றும் அதன் அடர்த்தி குறித்த தகவல்களை சேகரித்தன. 2008ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டதாகவும், ஆஸ்திரேலிய கடற்கரைகளில் 8 வெவ்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

ஆய்வுகள் மூலம் கிடைத்த தரவுகள் கடல்நீரின் மேற்பரப்பு அடர்த்தியும், கீழ்மட்ட அடர்த்தியும் வெவ்வேறாக உள்ளதை சுட்டிக்காட்டின. இதில் இருந்து கடல் நீருக்கடியில் ஆறுகள் உள்ளதை ஆய்வாளர்கள் உறுதிசெய்தனர். அதாவது கடல் நீரைக்காட்டிலும், நதியின் நீர் அதிக அடர்த்தியாக உள்ளதால் அவை அடிப்பகுதியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறுகள் பெரும்பாலும் குளிர்காலத்தில் உருவாவதாகவும், இவை சுமார் 10,000 கிலோமீட்டர் நீண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.. அத்துடன் அதிக வெப்பம் காரணமாக இவை வேகமாக ஆவியாகும் தன்மை கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் Chari Pattiaratchi, நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீரோட்டத்தை செயற்கைக்கோள்கள் மூலம் எளிதாக கண்டறிய முடியும் எனவும், ஆனால் இந்த ஆறுகள் நீருக்கடியில் இருந்ததால் இத்தனை நாட்களாக அவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறினார். ரோபோட்டிக் கிளைடர்களின் உதவியால்தான் இந்த ஆறுகள் கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாது, உலகளவில் கடல் ஆராய்ச்சி துறையில் இது மிக முக்கியமான கண்டுபிடிப்பு எனவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version