சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனியை வாழ்த்தி, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், சர்வதேச போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற்ற தகவல் கேட்டு ஏமாற்றம் அடைந்ததாகவும், இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களின் தோனியும் ஒருவர் எனவும், புதிய இந்தியாவின் அடையாளங்களில் ஒருவர் தோனி எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் சிக்சர் அடித்து இந்தியாவிற்கு வெற்றிக் கோப்பையை வாங்கிக் கொடுத்ததை மறக்கவே முடியாது என சுட்டிக் காட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன், கேப்டன், விக்கெட் கீப்பர் என்று வரலாறு தோனியை பெருமைப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார். வெறும் கிரிக்கெட் வீரராக மட்டும் தோனியை சுருக்கி விட முடியாது என்றும், பல கோடி இளைஞர்களுக்கு தோனி உத்வேகம் எனவும் புகழாரம் சூட்டினார். தோனி குடும்பத்தாரின் தியாகமே அவரது வரலாற்று சாதனைக்கு மிகப்பெரிய காரணம் எனவும், இனி வரும் காலங்களில், குடும்பத்தினருடன் தோனி மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க வேண்டும் எனவும், பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
இது குறித்து நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மகேந்திர சிங் தோனி, ஒரு விளையாட்டு வீரனுடைய கடின உழைப்பும், தியாகமும் அனைவராலும் கவனிக்கப்படுவதும், பாராட்டப்படுவதும் தான் அவனுக்கு பலம் எனவும், பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.