திமுகவினரின் கொலை மிரட்டலுக்குப் பயந்து, திமுக ஒன்றிய கவுன்சிலரே தலைமறைவாகி இருப்பது தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமறைவாக உள்ள ஒன்றிய கவுன்சிலர் நியூஸ் ஜெ சேனலுக்குப் பிரத்யேகமாக அளித்துள்ள பேட்டியில், திமுகவினர் தனக்கும் தன் மகனுக்கும் கொலை மிரட்டல் விடுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 10 கவுன்சிலர் பதவியிடங்கள் உள்ளன. அண்மையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அங்கே 6 இடங்களை திமுக கைப்பற்றியது. 4 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இரண்டு இடங்கள் அதிகம் வென்ற திமுக, எப்படியாவது ஒன்றிய சேர்மன் பொறுப்பையும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், சொந்தக் கட்சிக்காரர்களிடமே அராஜகத்தில் இறங்கி உள்ளது.
சின்னமனூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் நேற்று, சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவி ஏற்றனர். பதவி ஏற்பு நடந்து கொண்டிருந்தபோதே, அங்கு கூடிய திமுகவினர், சொந்தக் கட்சி ஒன்றிய கவுன்சிலர்களை ரகசிய இடத்துக்குக் கொண்டு போக முயன்றனர். அதற்காக திமுகவினர் ஏற்பாடு செய்திருந்த கார்களில் ஏறும்படி, திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேரையும் வற்புறுத்தினர்.
திமுக-வினரின் வற்புறுத்தலுக்கு, தி.மு.க சார்பில் சின்னமனூர் பொட்டிபுரம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஜெயந்தி மறுப்புத் தெரிவித்தார். தான் ஒரு பெண் என்பதால், வீட்டைவிட்டு ரகசிய இடத்தில் போய் தங்க முடியாது என்று அவர்களிடம் எடுத்துரைத்தார். ஜெயந்தியின் இந்தப் பதிலால், ஆத்திரமடைந்த திமுகவினர், அவருடன் வாக்குவாதம் செய்து, பிறகு அவரைத் தாக்கத் தொடங்கினர். நீ எவனுக்கு விலைபோனாய் என்ற ஆபாசமான வார்த்தைகளால் ஜெயந்தியைத் திட்டிய திமுக-வினர் ஒரு கட்டத்தில் வலுக்கட்டாயமாக அவரைக் காரில் ஏற்ற முயன்றனர். இதனால், அந்தப் பகுதியில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் விரைந்து வந்து, ஜெயந்தியை திமுகவினரிடம் இருந்து பத்திரமாக மீட்டு அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, திமுக மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள், ஜெயந்தியின் வீட்டிற்கு சென்று அவரை மிரட்டினர்… ஜெயந்தியையும் அவரது கணவரையும், மகனையும் வீட்டிலும் கொடூரமாக தாக்கத் தொடங்கினர். அந்தக் கொடூரத் தாக்குதலில், ஜெயந்தியின் கணவருடைய கை உடைந்தது. இதனால் எழுந்த கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் ஜெயந்தியை காப்பாற்றினர். இப்படி தொடர்ந்து தன்னையும் தன் குடும்பத்தையும் திமுகவினர் மிரட்டுவதால் பயந்துபோன ஜெயந்தி, தன் வீட்டில் இருந்து வெளியேறித் தலைமறைவானார். தற்போது காலியாக உள்ள ஜெயந்தியின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜெயந்தி கடத்தப்பட்டதாக திமுகவினர் காவல்துறையில் பொய்ப் புகார் கொடுக்கும் வேலையில் இறங்கினர். இந்தத் தகவல் ஜெயந்திக்கு தெரிந்ததும் அவர், நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் தேனி மாவட்ட செய்தியாளர் ராமகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது , தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் திமுக-வினரின் கொலை மிரட்டல் மற்றும் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே, திண்டுக்கல்லில் உள்ள தனது உறவினர் வீட்டில், தஞ்சமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தனக்கும் தன் மகனுக்கும் இப்போதும் திமுகவினர் கொலைமிரட்டல் விடுவதாக தெரிவித்த ஜெயந்தி, போலீஸ் பாதுகாப்புடன் வந்து 11-ம் தேதி ஊராட்சி சேர்மன் தேர்தலில் வாக்களிப்பேன் என்றும் குறிப்பிட்டார்.
சொந்தக் கட்சி ஒன்றிய கவுன்சிலர், கட்சி மாறி வாக்களித்து விடுவாரோ என்ற பயத்தில், பெண் என்றும் பாராமல் ஜெயந்திக்கு கொலை மிரட்டல் விடுவதும், தாக்குதல் நடத்துவதமாக உள்ள திமுகவின் செயலை தேனி மக்கள் அருவருப்பாக பார்க்கின்றனர்.