மறைந்தார் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன்!

தமிழின் தொன்ம வரலாற்றினை அனைவருக்கும் அறிமுகம் செய்திட்ட, தமிழ் நாட்டார் வழக்கியலின் ஆகப் பெரும் பொக்கிஷம்; தமிழறிஞரும் முனைவருமான தொ.பரமசிவம் தனது 70வது வயதில் காலமானார். அவரது மறைவு தமிழ் ஆய்வுலகுக்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஆய்வுலகில் தொ.பா என்றழைக்கப்படும் தொ.பரமசிவன் 1950 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ்ச் சமூகத்தின் குறிப்பிடத்தகுந்த பண்பாட்டு, மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவராக அறியப்படும் அவர், மதுரை தியாகராசா கல்லூரி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியற்றில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். அவரது ஆய்வுகள், பண்பாடு, சமயங்கள் தொடர்பான மார்க்சிய பெரியாரிய அடிப்படையை கொண்டவை.

மக்கள் பண்பாடு, வழிபாட்டு முறைகள் குறித்து திராவிடச் சிந்தனைகளுடன் கூடிய ஆய்வு முறையை கையாண்ட தொ.பரமசிவன், அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்க வேண்டியதன் அவசியத்தை, தனது படைப்புகளில் கூர்மையாக முன்வைத்தார். குலதெய்வங்கள் மீது தமிழ்ச் சமூகத்தின் கவனத்தை திசை திருப்பிய தொ.ப., பண்பாட்டு அசைவுகள், உரைகல், தெய்வம் என்பதோர், சமயங்களின் அரசியல் போன்ற நூல்களில், அரசியலுக்கு எதிரான வலுவான வரலாற்றுக் குறிப்புகளை, சான்றுகளுடன் முன்வைத்தார். அதேபோல், தமிழ் வைணவம், தமிழ் சமணம் எவ்விதம் வட இந்திய மரபுகளிலிருந்து வேறுபட்டது என்பதையும், தனது ஆய்வுகளின் வழியே மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளார் தொ.ப.

கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழும் தொ.ப-வின் ‘அழகர் கோயில்’ நூல், ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் புத்தகமாக விளங்குகிறது. அவரது மற்றுமொரு முக்கியமான நூலான ‘அறியப்படாத தமிழகம்’ நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணமாக காணப்படுகிறது. ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாக படிந்துள்ளன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்நூல்.

தொ.பவின் அனைத்து நூல்களுமே.., கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு; எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் பேசுகிறது. எச்சங்களாகவும் மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை கட்டுரைகள் வாயிலாக, தன் இறுதி மூச்சு வரை எழுதி வந்தவர் தொ.பரமசிவன்.

வரலாற்றின் உண்மைத்தன்மையை துணிவுடன் எடுத்துரைத்த தொ.பரமசிவனின் ஆய்வுக் கட்டுரைகள், தமிழ்ச் சமூகத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களாகத் திகழ்கிறது!!

 

 

Exit mobile version