முடக்கப்பட்ட டிக்டாக் செயலி – சிங்காரிக்கு அதிகரிக்கும் மவுசு!

பிரபல செல்போன் செயலி டிக்டாக்கிற்கு மூடுவிழா நடத்தப்பட்டதால், பலரது கவனமும் சிங்காரி செயலியின் பக்கம் திரும்பியுள்ளது. அப்படி என்ன தான் இருக்கிறது அந்த செயலியில்? நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக டிக்டாக் ஃபாலோயர்கள் தினமும் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு, லைக்குகளை குவித்து வந்தனர். நடிப்புத் திறமை, வாழ்க்கை பின்னணி, காமெடி கலாட்டாக்கள் என, ஒரு சாமானியனின் மறுபக்கத்தை காட்டும் கண்ணாடியாகவே பார்க்கப்பட்டது டிக்டாக். ஆனால் காலப்போக்கில் மிரட்டல்… ஆபாச நடனங்கள்… என வன்மத்தை தூண்டும் காட்சிகள் வெளிவர தொடங்கியதால் டிக்டாக் செயலி அவப்பெயரை சந்திக்க நேர்ந்தது. இந்த நிலையில் தான் சீன தயாரிப்பான டிக் டாக் செயலிக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. தங்கள் அபிமான செயலி முடக்கப்பட்டதால் துடிதுடித்துப்போன டிக்டாக் ஃபாலோயர்கள், அடுத்த பொழுது போக்கு அம்சத்துக்கு வலை விரித்தனர். அந்த வலையில் சிக்கியது தான் சிங்காரி செயலி. டிக்டாக்கை போலவே பல்வேறு அம்சங்களை கொண்ட செயலி, இவ்வளவு நாட்கள் பிரபலமாகாத நிலையில், தற்போது மவுசுடன் வலம் வர தொடங்கியுள்ளது. இந்த செயலியில் வீடியோக்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்வதுடன், நண்பர்களுடன் சாட்டிங்கும் செய்யலாம். மேலும் அன்றாட செய்திகள், நகைச்சுவை வீடியோக்கள், பாடல் காட்சிகள் என சிங்காரி பெற்றுள்ள அம்சங்கள் நீள்கிறது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிங்காரி செயலி கடந்த 2018ம் ஆண்டு கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிடப்பட்டது. கடந்த 10ம் தேதி வரை 1 லட்சம் பேர் மட்டுமே இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருந்த நிலையில், தற்போது ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த செயலியை பெங்களூருவை சேர்ந்த சுமித் கோஷ், பிஸ்வத்மா நாயக் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். கடந்த 30ம் தேதி மட்டும் இந்த செயலியை ஒரு மணி நேரத்துக்கு 6 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கிறார் நிர்வாகி சுமித் கோஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்த முடியும் என்பதால், நாளுக்கு நாள் இதன் மீதான மவுசு அதிகரித்து வருகிறது.டிக்டாக் செயலிக்கு மூடுவிழா நடத்தப்பட்டாலும், அதன் ஃபாலோயர்களுக்கு, சிங்காரி செயலி ஆகப்பெரும் ஆறுதல் என்பது மறுக்க முடியாத உண்மை…

Exit mobile version