திரையுலகம் இழந்த ஆண் தேவதை – தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்ற தாமிரா!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ‘ரெட்டச்சுழி’, ‘ஆண் தேவதை’ திரைப்படங்களின் இயக்குநரும், ஆகச்சிறந்த எழுத்தாளருமான தாமிரா காலமானார். அவரது கலையுலக பயணத்தை விவரிக்கிறது இந்தத் செய்தித் தொகுப்பு…

 

நெல்லை மாவட்டம் துலுக்கர்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தாமிரா என்ற சேக் தாவூத், இதழியலில் முதுகலை பட்டம் பெற்றவர். சினிமா கனவுகளோடு சென்னையில் கால் பதித்த அவர், பொம்மை உள்ளிட்ட பல சினிமா இதழ்களிலும் கட்டுரைகளை எழுதிவந்தார். தாமிரபரணி ஆற்றின் பெயரிலிருந்து தாமிரா என்பதை தனது புனைப் பெயராக்கிக்கொண்டு, பல சிறுகதைகளையும் அவர் எழுதத் துவங்கினார். அவரது ‘பர்வதமலையில் ராஜகுமாரி’, ‘தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் அனைவராலும் கவனம் ஈர்க்கப்பட்டன.

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய தாமிரா, பாலச்சந்தர் கடைசியாக இயக்கிய ‘பொய்’ படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். மேலும், “சஹானா, அண்ணி, மனைவி” உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் தாமிரா. தமிழ் படங்கள் தவிர கன்னடத்தில் வெளியான “அமிர்த்தாரோ, மாத்தாடு மாத்தாடு மல்லிகே” ஆகிய படங்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான “ரெட்டச்சுழி” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்த தாமிரா, முதல் படத்திலேயே பிரபல இயக்குநர்களான பாலசந்தர், பாரதிராஜா ஆகியோரை நடிக்க வைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இறுதியாக சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘ஆண் தேவைதை’ என்ற படம் அவர் இயக்கத்தில் வெளியானது. தாமிராவின் மிக முக்கியமான படைப்பாக ‘மெஹர்’ என்ற தொலைக்காட்சிப் படம் காணப்படுகிறது. பிரபஞ்சன் எழுதிய ‘பாயம்மா’ சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட ‘மெஹர்’, வரதட்சணையால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம் குடும்பத்தில் நிலவும் சிக்கல்களை, வலிகள் நிறைந்த காட்சிகள் வழியே எடுத்துரைத்தது.

“இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சமம் இல்லை
என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன்.
இனி யாரோடும் பகைமுரண் இல்லை; யாவரும் கேளீர்” என்ற தனது இறுதி முகநூல் பதிவிலும் கூட மாசற்ற மானுட அன்பை விதைத்துவிட்டுச் சென்றுள்ளார் இயக்குநர் தாமிரா.

Exit mobile version