அரசியல் நையாண்டியில் அதகளம் செய்த இயக்குநர் மணிவண்ணன்

1954ம் ஆண்டு கோவை மாவட்டம் சூலூரில் பிறந்த மணிவண்ணன், பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சில படங்களில் பணியாற்றினார். பாரதிராஜாவின் நிழல்கள் படத்தின் மூலம் கதை, வசனகர்த்தாகவும் அறிமுகமான மணிவண்ணன், தமிழ் சினிமாவில் சாதியத்துக்கும் மதத்திற்கும் எதிராக சாட்டையை சுழற்றிய அலைகள் ஓய்வதில்லை படத்திற்கும் கதை, வசனம் எழுதியவர் என்பது பலரும் அறியாதது.

கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குநர் அவதாரமெடுத்த மணிவண்ணன், 24 மணி நேரம், நூறாவது நாள் போன்ற க்ரைம் த்ரில்லர் ஜானரிலும் படங்களை இயக்கி புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினார். சத்யராஜ் நடிப்பில் அவர் இயக்கிய அமைதிப்படை படம், தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த அரசியல் நையாண்டிப் படமாக இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

அமைதிப்படை மூலம் ரசிகர்களை கலங்கடித்த மணிவண்ணன், சத்யராஜ் கூட்டணியில், அதன்பிறகாக கவுண்டமணியும் இணைய, அவர்கள் நடித்த படங்களில் அரசியல், மூடநம்பிக்கை, பெண் அடிமைத்தனம் என அனைத்து சமகால பிரச்சினைகளையும் தோலுரித்துக் காட்டினர். தந்தை பெரியாரின் கொள்கைகளின் பால் ஈர்க்கப்பட்டிருந்த மணிவண்ணன், அவைகளைத் தனது படைப்புகளின் வழியே மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் மிகவும் தீர்க்கமாக களமாடினார்.

இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் நல்ல முதிர்ச்சியுடன் செழுமையான நடிப்பை தமிழ் சினிமாவிற்கு வழங்கினார் மணிவண்ணன். பல படங்களில் குணசித்திர நடிகராக கலங்க வைத்தவர், வில்லத்தனமான நடிப்பில் மிரட்டவும் செய்துள்ளார். என் ஆசை ராசாவே, சங்கமம் போன்ற படங்களில் நாட்டுப்புறக் கலைஞனாக மிளிரவும் அவர் தவறவில்லை.

சினிமாவை தவிர்த்து ஒரு கலைஞனுக்கான சமூக பொறுப்புகள் என்ன என்பதை தான் வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் கற்பித்தவர் மணிவண்ணன். அவர் காலம் சென்ற இந்த தினத்தை நினைவுகூறி அஞ்சலி செலுத்துகிறது நியூஸ் ஜெ.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக அப்துல் ரஹ்மான்

Exit mobile version