விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்த தமிழக அரசுக்கு, விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். இந்த ஆண்டு குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள வசதியாக, ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதனால் டெல்டா மாவட்டங்களில் வழக்கமான பரப்பளவை விட, அதிக அளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், 90 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அறுவடை செய்யப்பட்ட நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து வரதம் பட்டு ஊராட்சி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அங்கு புதிய நெல் கொள்முதல் நிலையம் திறக்க அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், புதிய நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்தார். இதற்காக, தமிழக அரசிற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version