திண்டுக்கல்லில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி தாளாளரான அமமுக பிரமுகர், 11 நாட்கள் நீதிமன்ற காவலில் பழனி சிறையில் அடைக்கப்பட்டார்.
முத்தனம்பட்டி சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், பாலியல் தொல்லை அளித்ததாக கல்லூரி மாணவிகள் அளித்த புகாரின் பேரில், போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா கைதான நிலையில், தலைமறைவான ஜோதிமுருகன் போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த 26ஆம் தேதி திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோதிமுருகனை, போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
காவல் முடிந்து மீண்டும் நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வரும்10-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பழனி கிளை சிறையில் ஜோதிமுருகன் அடைக்கப்பட்டார்.
மேலும், விடுதி காப்பாளர் அர்ச்சனா மீது மேலும் ஒரு மாணவி புகார் அளித்ததன் அடிப்படையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அர்ச்சனாவையும், டிசம்பர் 10 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.