திண்டுக்கல்லில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் ஏராளமான படைப்புகளை மாணவ மாணவிகள் காட்சிப்படுத்தினர்.
திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கண்காட்சியில் மாணவர்களின் படைப்பாற்றலையும் அறிவியல் திறனையும் வெளிப்படுத்தும் வகையில், ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இயந்திரங்களின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக சோலார் இயந்திரம், தானியங்கி போக்குவரத்து கண்காணிப்பு கோபுரம், காய்கறிகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரம், ரோபோ மாதிரி சூரிய ஒளியின் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.