சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய விவகாரத்தில் தலைமறைவாகி உள்ள தீட்சிதரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் வ.உ.சி தெருவை சேர்ந்த லதா என்பவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தனது மகனின் பிறந்த நாளை கொண்டாட நடராஜர் கோவிலுக்கு அவர் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது கோயில் பிரகாரத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்ய தேங்காய் மற்றும் பழ தட்டை லதா கொடுத்துள்ளார். ஆனால் தீட்சிதர் வெறும் தேங்காயை உடைத்துவிட்டு அர்ச்சனை செய்யாமல் திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தீட்சிதரிடம் கேட்டதற்கு அவர், லதாவை திட்டி கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனால் காயமடைந்த லதா அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீட்சதர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள தீட்சிதரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.