யானை என்றாலே கம்பீரம் என்பதுதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் இலங்கையில் பெளத்த திருவிழாவில் பங்கேற்ற யானையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி மொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உலகில் கொஞ்சம் கொஞ்சமாக விலங்குகளுக்கு இடம் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. பல்வேறு அரிய உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. சில உயிரினங்கள் மொத்தமாக அழிந்தேவிட்டன. உலகம் முழுவதும் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
காடுகள் ஆக்கிரமிப்பு, மனிதத் துன்புறுத்தல், உணவுப் பற்றாக்குறை, வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் பல உயிரினங்கள் தங்கள் இருப்பிடத்தை இழந்து மாறுபட்ட சூழலில் வாழ்ந்து வருகின்றன. இப்படியான சூழலில் சேவ் எலிபேண்ட் (Save Elephant ) என்ற அறக்கட்டளை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. காண்போர் மனதை உலுக்கும் படியாக இருக்கிறது இந்த புகைப்படம்.
இலங்கையில் உள்ள கண்டியில் ஆண்டு தோறும் ஈசாலா பெரஹேரா என்ற திருவிழா கொண்டாடப்படும். பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட யானைகளும், 200-க்கும் அதிகமான கலைஞர்களும் பங்கேற்பர். திருவிழாவில் கலந்துகொள்ளும் யானைகளில் 70 வயதான டிக்கிரி என்ற பெண் யானையும் ஒன்று.
அதற்கு உடல் நிலை சரியில்லை. திருவிழா தொடங்கும் போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்துக்குத் திரும்புகிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர்.
டிக்கிரி தினமும் பல கிலோ மீட்டர்களுக்கு நடந்து அழைத்துச் செல்லப்படுகிறது. அப்படிச் செல்லும் வழிகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதம் செய்யவும் கட்டளையிடுகின்றனர். அதன் உடல் முழுவதும் பட்டாடைகளால் மூடி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதனால் யானையின் எலும்பு உடம்பு மக்களுக்குத் தெரிவதில்லை. அதிக வெளிச்சத்தினால் கண்களில் வரும் கண்ணீரையும் யாரும் கவனிப்பதில்லை.
டிக்கிரியை கஷ்டப்படுத்திப் பெறப்படும் ஆசீர்வாதம் எப்படிச் சிறந்ததாக இருக்கமுடியும் என கூறுகின்றனர் இணைய வாசிகளும், விலங்குகள் நல ஆர்வலர்களும்.விழா என்பது அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒன்று. ஆனால் அது பிறருக்கு எந்த கஷ்டத்தையும் அளிக்காமல் இருக்க வேண்டும்.