அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்கள் நியமனம்!!

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை, வேலூர், கோவை, மதுரை என 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மண்டலச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் மற்றும் துணை நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, சென்னை, வேலூர், கோவை, மதுரை என 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் உள்ளடக்கி செயல்படும் மாவட்டங்களின் விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் சென்னை மண்டல செயலாளராiக அஸ்பயர் கே. சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மண்டல செயலாளராக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மண்டல செயலாளராக சிங்கை ஜி. ராமச்சந்திரன், மதுரை மண்டல செயலாளராக வி.வி.ஆர். ராஜ் சத்யன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

துணை நிர்வாகிகள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தற்போது பிரிக்கப்பட்டுள்ள மண்டலங்களுக்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும், சம்பந்தப்பட்ட மண்டலச் செயலாளருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கட்சி பணியாற்ற வேண்டும் என்றும் அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version