காது கேளாத வாய் பேச முடியாத மாணவன் கார்த்திக், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தேசிய அளவில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
கரூர் மாவட்டத்தின் தோட்டக்குறிச்சியை சேர்ந்த இவர், மாற்றுத் திறனாளிகள் படிக்கும் பள்ளியில் சேர மறுத்து இயல்பான மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சேர்ந்தார். விடாமுயற்சியின் காரணமாக படிப்போடு விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறார். தற்போது கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் படித்து வரும் கார்த்திக், தடை ஓட்டம் மற்றும் உயரம் தாண்டுதலில் தேசிய அளவில் 2 தங்கங்களையும், மாநில அளவில் 3 தங்கங்களையும் பெற்று அசத்தியுள்ளார். மேலும் கொரிய பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் 8-வது இடம் பெற்றார்.
கார்த்திக்கின் முயற்சிக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவரது பெற்றோர், வருகின்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் கார்த்திக் நிச்சயம் தங்கம் வெல்வார் என நம்பிக்கை தெரிவித்தனர்.