திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பலகட்ட விழிப்புணர்வு மற்றும் அறிவுத்திறன் பயிற்சிகளுடன் கூடிய மாறுபட்ட நிகழ்ச்சி நடைபெற்றது
வழக்கம் போல் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகை தரும்போது புத்தகங்கள் எடுத்துவருகின்றனர். ஆனால் மணப்பாறை அரசு பள்ளியில் புத்தகங்கள் ஏதும் எடுத்து வராமல் “புத்தகம் இல்லா நாள் ” கடைப்பிடிக்கப்பட்டது. இதற்கு மாறாகப் பள்ளியில் பாரம்பரிய கிராமப்புற கலாச்சாரங்களை மையமாகக்கொண்டு விளையாடக்கூடிய தாயம், கில்லி, பம்பரம், கோலி, கல்லாங்காய் முதலிய உபகரணங்கள் எடுத்து வந்து பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். அப்போது ஆசிரியர்களும் மாணவர்களோடு இணைந்து நொண்டி, கில்லி ஆகிய விளையாட்டுக்களை விளையாடி மாணவர்களை மகிழ்வித்தனர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம், வாள் வீச்சு, மான்கொம்பு உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு கலைகளும், தீப்பந்தம் சுற்றுதல் போன்ற சாகச நிகழ்ச்சிகளையும் செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.