தலைப்பை பார்த்ததும் வடிவேலுவும் முத்துக்காளையும் நினைவுக்கு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல. அது தமிழ் சினிமாவின் வெற்றி.
அதெப்படி செத்து செத்து விளையாட முடியும். இதெல்லாம் ஒரு சித்து வேலைஎன்கிற மாந்திரீக மண்டைகள் ஒருபக்கம், கடுமையான பயிற்சி என்றும் , தந்திரமென்றும் யதார்த்தம் பேசுவோர் ஒருபக்கம் . எது எப்படியானாலும் நம்மைக் குழப்பிவிட்டு கொண்டாட்டம் போடுகிற மர்மங்களில் இதுவும் ஒன்று.
1837 ல் பஞ்சாபில் வாழ்ந்த சாது ஒருவர்தான் இப்படி விளையாடியது. இவர் வேண்டும்போது உடலைவிட்டுப் போய்விடுவார் என்றும் தேவையான போது தன்னைத் தானே உயிர்ப்பித்துக்கொள்வதாகவும் ஊருக்குள் பேச்சு. அப்போதைய மன்னர் ரஞ்சித் சிங் மஹாராஜா இதை கேள்விப்பட்டு சாதுவை அழைத்து செய்துகாட்டச் சொன்னார். உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய எந்தக்கட்டாயமும் எனக்கு இல்லை. வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள் ஒரு சிறு காலத்திற்கு நான் என்னுடலை விட்டுப் போக வேண்டிய தேவை வந்திருக்கிறது. நான் திரும்பி வரும் வரை என் உடலைப்பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.
உயிர் பிரிவதற்காக ஒரு நாள் குறிக்கப்பட்டது. அதே அரைக்கச்சையுடன் அவைக்கு வந்தார் சாது. ஊர் மொத்தமும் வேடிக்கை பார்க்க நிரம்பியிருந்தது. அரசவை விருந்தினர்கள் , வெளிநாட்டுப் பயனிகள் என அவ்வளவு பேர் சூழ்ந்திருக்க சாதுவாக நின்றிருந்தார் சாது.
இந்த இடம்தான் மர்மம் தொடங்குகிற இடம். அதாவது உடலை விட்டுப்போவதென்றால் எங்கள் உள்ளூர் மந்திரவாதி செய்யும் கூடுவிட்டுக் கூடு பாயும் தந்திரம்தானே? என்கிறீர்களா. இல்லை என்று எல்லோர் முகத்திலும் கரிபூசிவிட்டு நம்மை குழப்பத்தின் எல்லையில் நிறுத்துகிறார் சாது. (அட என்னன்னு சீக்கிரம் சொல்லப்பா)
அவையை நோக்கி “நான் என் ஜீரண சக்தியை நிறுத்திவிட்டேன். வேண்டுமானால் பரிசோதித்துக்கொள்ளுங்கள்” என்றார். சோதனைக்காக அவருக்கு பால் வழங்கப்பட்டது. என்ன ஆச்சரியம்.! அவரது சிறுநீராக பால் அப்படியே வந்தது.
வெறுமனே உடலை விட்டு உயிர்பிரிக்கும் மந்திரவாதி என்றோ, உடலை தனக்கேற்றாற்போல் ஆட்டவல்ல தந்திரவாதி என்றோ ஒதுக்கிவிட முடியாதபடிக்கு இவரது செய்கைகளால் அவையினர் திக்குமுக்காடிப்போயினர்.
அரச தோட்டத்தில் குழி வெட்டப்பட்டது. உடலை மெழுகு கொண்டு நன்கு சுற்றி மூடி உள்ளே வைத்துப் பாதுகாப்பதாக திட்டம். தீவிர சோதனைக்குப் பின்னர், தப்பிச்செல்ல வழியில்லை என்பதை உறுதி செய்தபின் அரசரின் மேற்பார்வையில் நாளும் கண்கானிக்க அரசவைத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்த்தது.
மருத்துவர்கள் சாதுவின் உடலை பரிசோதித்தனர். மெல்ல நாடி குறைந்து,உடல் கட்டுப்பாட்டை இழந்து சரிந்தது. ஆய்வு செய்த மருத்துவர்கள் முடிவு அறிவித்தனர். ”ஆம் இவர் இறந்துவிட்டார்” என்று.
வெட்டப்பட்ட குழியில் திட்டமிட்டபடி புதைக்கப்பட்டார். கண்காணிப்பு படு தீவிரமாக நடந்தது. குறிப்பிட்ட நாள் வந்ததும் அந்த உடலை வெளியே எடுத்தார்கள். உடல் கெட்டுப்போகாமல் அப்படியே இருந்தது. ஆனால் அசைவில்லை. அந்த உடலை சுத்தம் செய்து கை கால்களை நீவி, நீட்டி,மடக்கி ஆக வேண்டியவைகளை செய்தனர். ஆனாலும் அசைவில்லை. மெல்ல மெல்ல நாடி உயர்ந்தது. இதயம் துடிக்கத் தொடங்கியது. மூச்சு வரத் தொடங்கியது. பேச்சு மட்டும் வரவில்லை.
அவை அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. பலரும் மயங்கிப் போயினர். வாய் இறுகிப் போயிருந்ததால் பேச்சு இல்லை. பின் வீரர்கள் உதவிகொண்டு வாய் திறகப்பட்டது. தாடை அசைந்தவுடன் அவர் பேசிய முதல் வார்த்தை “ என் உடலை நீங்கள் பத்திரமாக வைத்திருப்பீர்களா என்றுதான் ரொம்ப பயந்தேன் ” என்பதுதான்.
பேசிவிட்டு தான்போகும் போக்கில் எழுந்து நடந்து போய்க்கொண்டே இருந்தார். எந்த சலசலப்பையும் சட்டை செய்யவில்லை.
ஒட்டுமொத்த பஞ்சாபும் ஒருகணம் உறைந்து போயிருந்தது. பின்னுள்ள மர்மத்தை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பியது ஒரு கூட்டம். ஆனால் யதார்த்தம் என்ன தெரியுமா? இப்போது நீங்கள் இதை வாசித்துகொண்டிருக்கும் இந்த நிமிடம் வரையில் இதற்கு விடைகிடைத்தபாடில்லை.