பரபரப்பான நம் காலை நேரங்களில் வீடு தொடங்கி பயண இலக்குகள் வரை நம்முடன் சேர்ந்தே பயணிப்பது வானொலியின் பண்பலை ஒலிபரப்புகள். எத்தனையோ பொழுதுபோக்கு ஊடகங்கள் வந்துவிட்டாலும் கூட இன்னமும் பெரும்பான்மை இந்தியச் சமூகத்தின் உன்னத ஊடகமாக இருப்பது வானொலி பண்பலைகள்தான். நிலப்பரப்பில் வாழும் நமக்கு மட்டுமல்ல கடலோடிகளுக்கும் ரேடியோ நேசமிகு ஊடகமாக இருக்கிறது என்பதற்கான சாட்சிதான் கடல் ஓசை 90.4 சமுதாய வானொலி.
இராமேஸ்வரம் அருகே பாம்பனில் அப்படி ஒரு வானொலி 24 மணிநேரமும் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாம்பன் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ என்பவரால் நடத்தப்படும் நேசக்கரங்கள் அறக்கட்டளையின் கடல் ஓசை 90.4 நமது முன்னேற்றத்துக்கான வானொலி’ என்ற அறிவிப்புடன் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தொடங்குகின்றனர்.
உலகிலேயே மீனவ சமுதாயத்துக்கு என்றே பிரத்யேகமாகச் செயல்படும் வானொலி நிலையம் இது மட்டுமே ஆகும். இந்த வானொலி நிலையம் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. ராமேசுவரம் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியை சார்ந்த மீனவ சமூக இளைஞர்களையே வானொலி வல்லுநர்களாக பயிற்சி அளித்து இது இயக்கப்படுவது கூடுதல் சிறப்பு.
படகுகளில் மீன்பிடிப்புக்குச் செல்லும் பல்லாயிரக்கணக்கான மீனவர்களுக்கு சுனாமி, புயல், கடல் சீற்றம் போன்ற ஆபத்து காலங்களில் செய்ய வேண்டியது என்ன? கடலில் அபாயகரமான பகுதிகள் எவை? அதிக மீன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்த தகவல் வழங்கப்படுகிறது.
மீனவர்களுக்கான மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள், மீனவ குழந்தைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு, மீனவ பெண்களுக்கான பிரத்தியேகமான வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி அளிப்பது, சுகாதாரமான முறையில் மீன்களை கையாள்வது மட்டுமின்றி ஏற்றுமதி குறித்த தொழில்நுட்ப உரைகளும் கடல் ஓசையில் இடம் பெறுகிறது.
மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் உயிர் வாழக்கூடிய அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கடல் சூழலியல் மண்டலத்தை பாதிக்காத வண்ணம் மீன்பிடி முறைகள் குறித்த நிகழ்ச்சிகளையும் கடல் ஓசை வானொலியில் கேட்கலாம். மீனவர்களுக்காக மட்டுமே செயல்படும் இந்த வானொலி மீனவர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என கூறலாம்.
Discussion about this post