கொரோனாவுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய்த்தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல்வேறு நாடுகள் அதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளன. அதன் ஒருபகுதியாக கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சியாட்டிலில் உள்ள கெய்சர் பெர்மனண்டே வாஷிங்டன் சுகாதார ஆராச்சி நிறுவனத்தில் இந்த சோதனை நடைபெறவுள்ளதாகவும், இதற்காக அந்நாட்டு அரசு நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக, ஆரோக்கியமாக உள்ள 45 இளைஞர்களிடம் இந்த சோதனை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சோதனை நிறைவடைய ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.