T 20 போட்டிகளிலிருந்து தோனி நீக்கம்

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா உடனான 20 ஓவர் போட்டிகளிலிருந்து, நட்சத்திர வீரர் தோனி நீக்கப்பட்டிருப்பது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. அந்த போட்டிகளில் விளையாட உள்ள 15 வீரர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், நட்சத்திர வீரரான தோனியின் பெயர் இடம்பெறவில்லை. அதேபோல், விரைவில் நடக்க இருக்கும் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் வீரர்கள் பட்டியலிலும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில் ரசிகர்களை கொண்டவர், தல என்று செல்லமாக அழைக்கப்படும் தோனி.

இவர், ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். தற்போது ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே ஆடிவரும் தோனி, தேர்வாளர்களின் இந்த முடிவால்,20 ஓவர் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்படுவாரோ என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதற்கிடையே, மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான மூன்று 20 ஓவர் போட்டிகளிலிருந்தும், இந்திய அணித் தலைவர் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, வழக்கம் போல், ரோஹித் ஷர்மா அணித் தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version