கிரிக்கெட் அரங்கில் தவிர்க்க முடியாத தலைவன் “தோனி” -#HBDMSDHONI

தோனி என்ற மந்திர சொல், உலக கிரிக்கெட் அரங்கில் தவிர்க்க முடியாத ஒன்று.. ஆம் இந்தியா மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு மாபெரும் வீரர். களத்தில் இவர் நடந்து கொள்ளும் விதமே தனி தான். ஆம் எந்த வித ஆரவாரமில்லாமல், வெற்றியையும் தோல்வியையும் சம அளவில் வைத்திருக்கும் மாமனிதன் தான் மகேந்திர சிங் தோனி.

வெறும் அதிர்ஷ்டம் மட்டுமே தோனியை இந்த உயரத்துக்கு அழைத்து வந்துவிடவில்லை, அதற்காக அவர் கொடுத்த உழைப்பும், முயற்சியும் அபாரமானது. சச்சின் அடுத்தபடியாக இந்தியாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரே வீரர் தோனி தான்…

கோபமான கேப்டன்களையே பார்த்து வந்த கிரிக்கெட் உலகம், தோனியின் அணுகுமுறையைக் கண்டு வியந்தது. எந்தவொரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத அமைதியான கேப்டன் கூலாக அறியப்பட்டார் தோனி..

1981-ம் ஆண்டு ஜுலை 7-ம் தேதி ராஞ்சியில் பான் சிங் – தேவகி தேவி தம்பதியினருக்கு மகனாக பிறந்த தோனி முதலில் பேட்மிண்டன் மற்றும் கால்பந்து போட்டிகளில் ஆர்வம் காட்டினார்.

குறிப்பாக கால்பந்து போட்டியில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். கால்பந்தில் ஒரு சிறந்த கோல் கீப்பராக திகழ்ந்தார். இவரது திறமையால் கால்பந்து போட்டிகளில் மாவட்ட மற்றும் கிளப் அளவிலான போட்டிகளுக்கு தோனி தேர்வு பெற்றார்.

1993ஆம் ஆண்டு பள்ளி கால்பந்து அணியின் கோல் கீப்பர்ராக அறியப்பட்ட தோனி, அதே ஆண்டில் பள்ளி கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பராக எதிர்பாராத விதமாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் தான் கிரிக்கெட் விளையாடும் படி உள்ளூர் கால்பந்து பயிற்சியாளர் அவரை அனுப்பி வைத்தார். 1995 – 1998 ஆகிய ஆண்டுகளில் தோனி தனது விக்கெட் கீப்பிங் திறமைகளால் பாராட்டப் பெற்று கிளப் அணிகளில் இணைந்தார். தோனியின் திறமையால் 16 வயதுக்குட்பட்டோருக்கான வினு மான்கட் டிராபி சாம்பியன்ஷிப் தொடரில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்.

இந்த சமயத்தில் தான், தோனி ஜிம்பாப்வே அணி எதிராக இந்திய ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டார். பிறகு 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அடி எடுத்து வைத்த தோனிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஆம், தனது முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆனார். அதன் பின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் சதம் அடித்து அசத்தினார். அதே ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தால் 183 ரன்கள் எடுத்தார்.

2007ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற உலககோப்பை தொடரின் லீக் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது. இதனால் அப்போது கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அடுத்துவந்த தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற டி20 உலககோப்பை தொடரின் இந்திய அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். அன்று முதல் தோனி…தோனி என்ற பெயர் உச்சத்தை தொட்டது. பாகிஸ்தானிற்கு எதிரான இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில் ஹர்பஜன் சிங்குக்கு பதிலாக ஜோகிந்தர் ஷர்மாவை பந்து வீச சொன்னார் தோனி. தோனியின் இந்த முடிவை பலரும் விமர்சிக்க தொடங்கினர். ஆனால் தான் எடுத்த முடிவு சரிதான் என்று கோப்பை வென்று நிரூபித்தார் தோனி.

அடுத்த நடந்த ஆஸ்திரேலியா தொடரிலும் தோனி இந்திய அணியின் (50 ஓவர்) கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, முழுநேர இந்திய அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று அசத்தியது. தொடர்ந்து தோனி தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணிலும், அந்நிய மண்ணிலும் வெற்றிகளை குவித்தது.

தோனி தனது ஆட்டத் திறனையும் வெகுவாக உயர்த்தி கொண்டார். ஆம், உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் சுழற்பந்து வீச்சாளர்கள் வரை தோனியின் மட்டை சுழலும் வேகத்தை அறிவர். சிறந்த பினிஷர் என்று புகழப்படும் தோனி, கடைசி சில ஓவர்களின் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். அபாயகரமான பேட்ஸ்மேனாகவும், அமைதியான கேப்டனாகவும் அறியப்பட்ட தோனி, 2011-ம் ஆண்டு இந்தியா-இலங்கை-வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலககோப்பை தொடரின் இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் சிறப்பாக ஆடி கோப்பையை வென்று கொடுத்தார் தோனி.

கபில்தேவிற்கு பின் உலக கோப்பையை பெற்றுத்தந்த கேப்டன் என்ற பெருமையை தோனி அடைந்தார். சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரை டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையில் பட்டம் என அனைத்து சாதனைகளையும் தனது கேப்டன்ஷிப்பில் பெற்ற ஒரே கேப்டன் என்று தோனியை கிரிக்கெட் உலகம் தலையில் வைத்து கொண்டாடியது.

சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அதிக போட்டிகளில் (199 போட்டி) கேப்டனாக இருந்தவர் தோனி தான். அதே போல், சர்வதேச கிரிக்கெட்டில் ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிக சதங்கள் கண்ட பேட்ஸ்மேன் என்ற சாதனையும் தோனி வசமே இருக்கிறது.

இவரது மின்னல் வேக ஸ்டம்பிங்கிற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஐ.பி.எல் முதல் தொடர் முதல் இன்று வரை சென்னை அணியின் கேப்டன் தோனி தான். தமிழ் நாட்டின் செல்லப்பிள்ளையாகவே வலம் வந்தார் தோனி. சென்னை ரசிகர்களும் தோனியை ‘தல’ என்று அன்போடு அழைத்தனர்.

இன்று பிறந்தநாள் காணும் தோனிக்கு உலக முழுவதிலிருந்தும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நியூஸ் ஜெ சார்பாகவும் Mr.கூல்லிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Exit mobile version