இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
இதில் முதலாவதாக நடந்த டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து நடந்த 5 ஒருநாள் போட்டிகள் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நேற்று ராஞ்சியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 10,13 ஆகிய தேதிகளில் நடைப்பெறுகிறது.
இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் மிக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்தியாவும் அதற்கான பணியை மேற்கொள்ளும் முயற்சியாக கடைசி 2 போட்டிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அணியில் இளம் வீரர்கள் அதிகம் உள்ளதால் அவர்களுக்கு வாய்ப்பளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.அதன்படி கடைசி 2 போட்டிகளில் தோனிக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். இந்த போட்டிகளை வைத்தே உலகக்கோப்பைக்கான அணி வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.